தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், பாஜகவானது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் செய்திகள் பரவிய நிலையில், இது குறித்து பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். இந்தக் கேள்விக்குப் பதிலளித்த அவர், “தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை (‘NDA’) விரிவுபடுத்த விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.
மேலும், “தவெக தலைவர் விஜய்யுடன் கூட்டணி குறித்து, கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களுடன் பேசி முடிவெடுப்போம்” என்று அமித் ஷா கூறினார். அத்துடன், “காங்கிரஸ் கட்சியும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தகவல் வருகிறது. அதில் எந்தத் தவறும் இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டார். இதன் மூலம், விஜய்யுடன் கூட்டணி அமைப்பது குறித்து பாஜகவின் தலைமை பரிசீலித்து வருவதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
