அதிமுக முன்னாள் எம்.பியும், பிரபல நடிகருமான ராமராஜன், அதிமுக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை உருவாகி வருவதாகவும், என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்திருந்தாலும், அதை வெளிப்படையாக சொல்ல முடியாது எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இன்று (செப்டம்பர் 7) நடைபெற்ற “நடிகர் ராமராஜன் நற்பணி மன்ற அலுவலக திறப்பு விழா”வில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

“இன்றைய அரசியல் சூழ்நிலையை நன்கு கவனித்து வருகிறேன். அதிமுக அரசியலில் ஏதோ ஒன்று நடக்கப்போகிறது. ஆனால், என்ன நடக்கப்போகிறது என்பதை சொல்லும் அதிகாரம் எனக்கில்லை. 1998-ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், நான் அமைதியாக இருந்தேன். அதிமுகவில் எனக்கு எந்த பொறுப்பும் தரப்படவில்லை. கட்சியை ஒன்று சேர்க்க வேண்டிய நிலை உள்ளது. அதற்கான வேலைக்கு நேரம் தேவை.

அரசியலில் சண்டை, சச்சரவுகள் என்பது கவுண்டமணி சொல்வது போல, “அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா” என்பதுபோல தான். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்கள் வகுத்த வழியிலேயே கட்சி செல்ல வேண்டும் என்பது என் எண்ணம். எம்ஜிஆரின் புகழுக்கு பாதிப்பு ஏற்படும்போது, என் உயிரைக் கூட கொடுத்து அவர் புகழை காக்கத் தயார். விஜய் அரசியலுக்கு வருவதை மக்களே தீர்மானிப்பார்கள். மக்களின் தீர்ப்பு என்பதே இறை தீர்ப்பாக அமையும்” என ராமராஜன் தெரிவித்துள்ளார். மேலும் ராமராஜனின் இந்த கருத்துகள், அதிமுக அரசியலில் தற்போது நிலவுகிற உள்நடப்பு பரபரப்புகளுக்கு முக்கியமான பின்னணி விளக்கமாக கருதப்படுகிறது.