முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன், கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிராக விமர்சனத்துடன் கூடிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், கட்சியில் இருந்து விலகியவர்களை மீண்டும் ஒருங்கிணைக்கக் கட்சித் தலைமையிடம் 10 நாட்கள் காலக்கெடு விதித்தார்.

செங்கோட்டையனின் இந்தக் கூற்றுக்கு உடனடி பதிலடி அளிக்கப்பட்டது. மறுநாளே, அவரின் கட்சி பதவியை எடப்பாடி பழனிசாமி ரத்து செய்ததன் மூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த நடவடிக்கையை ஓ.பன்னீர்செல்வம், வி.கே. சசிகலா, மற்றும் டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில், வரும் செப்டம்பர் 9ஆம் தேதி, செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, அதிமுக அரசியலில் புதிய சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, அதிமுக எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம், செங்கோட்டையனைத் தாக்கி  கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

“பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடு விதிப்பதற்கெல்லாம் செங்கோட்டையனுக்கு உரிமை இல்லை. எடப்பாடிக்கு உதவுவதைவிட, தொந்தரவு கொடுப்பது எப்படி நியாயமானது? இதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்களா? மேலும், செங்கோட்டையன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது” என்றார்.