அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பயணம் செய்யும் ‘ஏர் போர்ஸ் ஒன்’ (Air Force One) விமானத்திற்காக ஒதுக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட வான்பரப்பிற்குள், தனியார் விமானம் ஒன்று நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த விமானத்தை இடைமறிக்க இரண்டு எஃப்-16 (F-16) போர் விமானங்கள் அவசரமாக ஏவப்பட்டன.

புளோரிடா மாகாணத்தில் உள்ள பாம் பீச் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிபரின் விமானம் இருக்கும் பகுதிகளில் பாதுகாப்பு கருதி மற்ற விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்படுவது வழக்கம். ஆனால், ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு தனியார் விமானம் இந்த விதிமுறைகளை மீறி தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்தது.

‘நியூயார்க் போஸ்ட்’ வெளியிட்டுள்ள செய்தியின்படி, அந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த நிலையில் வான்பரப்பில் சுற்றியுள்ளது. இதனால் அதிபரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற நோக்கில், வட அமெரிக்க ஏரோஸ்பேஸ் பாதுகாப்பு கமாண்ட் உடனடியாக இரண்டு எஃப்-16 போர் விமானங்களை அங்கு அனுப்பியது.

பாம் பீச் வான்பரப்பில் அந்தத் தனியார் விமானத்தைச் சூழ்ந்த போர் விமானங்கள், ‘ஃபிளேர்ஸ்’ எனப்படும் ஒளிப்பந்துகளை வீசி சிக்னல் கொடுத்து அந்த விமானத்தை எச்சரித்தன. பின்னர், அந்த விமானத்தைப் பாதுகாப்பாகத் தடைசெய்யப்பட்ட பகுதிக்கு வெளியே போர் விமானங்கள் வழிநடத்திச் சென்றன. இந்தச் சம்பவத்தின்போது பாம் பீச் விமான நிலையத்தில் மற்ற விமானங்களின் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகையில், “இந்தச் சம்பவத்தால் அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கோ அல்லது அவரது ‘ஏர் போர்ஸ் ஒன்’ விமானத்திற்கோ எவ்வித நேரடி ஆபத்தும் ஏற்படவில்லை. அந்தத் தனியார் விமானத்துடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்தப்பட்ட பிறகு நிலைமை சீரானது. இது திட்டமிட்ட தாக்குதல் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்தனர். மேலும் மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவி வரும் சூழலில், அமெரிக்க அதிபரின் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள இந்தச் சிறிய குளறுபடி சர்வதேச அளவில் விவாதப் பொருளாகியுள்ளது.