எகிப்து நாட்டில் பதிவானதாகக் கூறப்படும் ஒரு சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பலத்த விவாதத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. படிக்கட்டில் நடந்து சென்றுகொண்டிருந்த ஒரு பெண் திடீரெனக் கீழே மயங்கி விழும் இந்த வீடியோ, பார்வையாளர்கள் மத்தியில் பல்வேறு ஊகங்களை உருவாக்கியுள்ளது.

வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு கட்டிடத்தின் உள்ளே இருக்கும் படிக்கட்டில் பெண் ஒருவர் சாதாரணமாக நடந்து கீழே இறங்கி வருகிறார். அதே நேரத்தில் எதிரே ஒரு பூனை படிக்கட்டில் ஏறி வருகிறது. அந்தப் பெண் பூனையைக் கவனித்தபடியே அதைக் கடந்து செல்கிறார்.

ஆனால், ஆச்சரியப்படும் விதமாக, பூனை கடந்து சென்ற அடுத்த கணமே அந்தப் பெண் திடீரெனத் தட்டுத்தடுமாறிப் படிக்கட்டுகளில் பலமாக விழுந்து விடுகிறார். அருகில் யாருமே இல்லாத நிலையில், அவர் எதிர்பாராதவிதமாகச் சுருண்டு விழுவது போன்ற இந்தக்காட்சி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 

எக்ஸ்  தளப் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, குறுகிய காலத்தில் 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளதுடன், ஆயிரக்கணக்கான கமெண்ட்களையும் ஈர்த்துள்ளது. இந்தச் சம்பவத்திற்கு நெட்டிசன்கள் பலரும் பலவிதமான காரணங்களைக் கூறி வருகின்றனர்: சிலர், அருகில் யாருமே இல்லாததால் இது கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சூட்சம சக்தியின் கைவரிசையாக இருக்கலாம் என்று நம்புகின்றனர். இன்னும் சிலரோ, இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மார்பிங் செய்யப்பட்ட போலியான வீடியோவாக இருக்கலாம் என்று வாதிடுகின்றனர்.

சில நகைச்சுவையான கமெண்ட்களில், “பூனை எதையும் உணராமல் எப்படிச் செல்லும்? இது கண்டிப்பாக ஏஐ வேலைதான்” என்றும், “பூனை பேயைக் கண்டு பயந்து விட்டது போல” என்றும் கலாய்த்து வருகின்றனர். இந்த வீடியோ உண்மையானதா அல்லது எடிட் செய்யப்பட்டதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும், இணையத்தில் இது தற்போது ஹாட் டாப்பிக்காக வலம் வந்துகொண்டிருக்கிறது.