ஹரியானா மாநிலம் குருகிராமில் வேலை செய்பவர்களுக்கு டிராஃபிக் ஜாம் (போக்குவரத்து நெரிசல்) ஒரு பெரிய தலைவலி. காலை, மாலை நேரங்களில் அலுவலகத்திற்கு செல்லும்போது கார்கள் வரிசையாக நிற்கும். இதனால் நேரம் வீணாகி, மன உளைச்சல் ஏற்படும். இந்த பிரச்சனையை எப்படி தவிர்ப்பது என்று தன்மய் ஜெயின் என்ற இளைஞர் லிங்க்டின் என்ற இணைய தளத்தில் ஒரு பதிவு செய்தார். அவர் ஒரு இ-காமர்ஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இந்த பதிவு இணையத்தில் பரவி, பலரால் பாராட்டப்பட்டது.

தன்மய் தனது யோசனையை எளிமையாக விளக்கினார். அவர் அலுவலகத்திற்கு தாமதமாக செல்கிறார் அதேபோன்று அலுவலகத்தை விட்டு இரவு 7 மணிக்கு மேல் வெளியேறுகிறார். அப்போது டிராஃபிக் மிகவும் குறைவாக இருப்பதால், வீட்டிற்கு செல்ல ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகிறது. காலையில் விரைவாக அலுவலகம் செல்ல முடியாததால், அவர் காலை நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடுகிறார். உதாரணமாக, உடற்பயிற்சி செய்வது, நடைப்பயிற்சி செய்வது போன்றவற்றால் உற்சாகமாக இருக்கிறார். இது அவரது பணி திறனை அதிகரிக்க உதவுகிறது.

தன்மய், பிரபல உளவியலாளர் டேனியல் கான்மனின் கருத்தை மேற்கோள் காட்டினார். சிறிய சோர்வு கூட நமது சிந்திக்கும் திறனை குறைக்கும் என்று அவர் கூறுகிறார். டிராஃபிக்கில் சிக்கி சோர்வடைவதால், அலுவலகத்திற்கு செல்லும்போதே மனம் சோர்ந்துவிடும். இதை தவிர்க்க, தன்மய் அலுவலக நேரத்தை சற்று மாற்றி, டிராஃபிக் இல்லாத நேரத்தில் பயணிக்கிறார். இந்த எளிய யோசனை பலருக்கு உதவியாக இருந்தது. லிங்க்டினில் பலர், “நல்ல யோசனை, நானும் முயற்சிக்கிறேன்” என்று கருத்து தெரிவித்தனர்.