தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. “ஆட்சி அதிகாரத்தில் பங்கு தராத கூட்டணி வேண்டாம்” என அந்தப் போஸ்டர்களில் பகிரங்கமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் நீடித்து வரும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர், இம்முறை தங்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் (அமைச்சரவையில்) பங்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தக் கூடும் என்பதால், காங்கிரஸ் கட்சித் தலைமை சமீபத்தில் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டியது. அதில், “கூட்டணி குறித்தோ அல்லது ஆட்சிப் பங்கு குறித்தோ பொதுவெளியில் யாரும் கருத்துத் தெரிவிக்கக் கூடாது; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், கட்சித் தலைமையின் எச்சரிக்கையையும் மீறி, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ‘காங்கிரஸ் ராஜீவ் காந்தி பேரவை’ சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் தமிழக அரசியலில் அதிரடியை ஏற்படுத்தியுள்ளன. அந்தப் போஸ்டர்களில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களின் படங்களுடன் இடம் பெற்றுள்ள வாசகங்கள் அதிர வைக்கின்றன.
அதாவது “அதிகாரமற்ற அரசியல் அர்த்தமற்ற அரசியல், “ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி வேண்டும், “அகில இந்திய தலைமையே புரிந்து கொள்! தன்மானம் இழந்து, சுயமரியாதை இழந்து கூட்டணி வைக்க வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கட்சித் தலைமை கட்டுப்பாடு விதித்துள்ள நிலையிலும், அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் பேரவை நிர்வாகிகள் இது போன்ற போஸ்டர்களை ஒட்டியுள்ளது, தி.மு.க. – காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் மேலிடம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை அரசியல் நோக்கர்கள் உற்று நோக்கி வருகின்றனர்.
