தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கூட்டணி வியூகம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக-வுடன் காங்கிரஸ் இணைவது உறுதியாகிவிட்டதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகி நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிலேயே, தனது கூட்டணிக்கு வருபவர்களுக்கு ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ வழங்கப்படும் எனத் தலைவர் விஜய் பகிரங்கமாக அறிவித்திருந்தார். இதுவரை எந்தக் கட்சியும் அதிகாரப்பூர்வமாக அக்கூட்டணிக்குச் செல்லாத நிலையில், தற்போது முதன்முறையாகக் கூட்டணி குறித்த தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.
தவெக-வின் அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சியின் நிர்வாகி நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி இணைவது இப்போது உறுதியாகிவிட்டது. அதனைத் தொடர்ந்து விசிக-வும் இந்த அணியில் இணைவார்கள். ஒரு ஆட்பெரும் சேனையோடு தார்மீக பலத்துடன் விஜய் தனது அணியைத் திரட்டிக் கொண்டிருக்கிறார்.”
மேலும் பேசிய அவர், “விஜய் அமைக்கும் இந்தக் கூட்டணியை எதிர்கொள்ள முடியாமல் ஆளுங்கட்சியான திமுக திக்குமுக்காடப் போகிறது. ஒரு வலிமையான மாற்றாக இந்த அணி உருவெடுக்கும்” எனத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.
ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் விசிக ஆகிய கட்சிகள் குறித்து நாஞ்சில் சம்பத் இவ்வாறு பேசியுள்ளது, தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் ‘ஆட்சிப் பங்கு’ கேட்டு போஸ்டர் ஒட்டியுள்ள நிலையில், நாஞ்சில் சம்பத்தின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மேலும் இது குறித்து காங்கிரஸ் அல்லது விசிக தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் ஏதும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
