தமிழக அரசியலில் ஆண்டிபட்டி தொகுதி என்றாலே எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு. இந்த முறை அந்தத் தொகுதி மீண்டும் ஒரு சுவாரஸ்யமான குடும்பப் போருக்குத் தயாராகிவிட்டது. திமுக சார்பில் அண்ணன் மகாராஜனும், அதிமுக சார்பில் தம்பி லோகிராஜனும் மூன்றாவது முறையாக நேருக்கு நேர் மோதவுள்ளனர்.
ஏற்கனவே 2019 மற்றும் 2021 தேர்தல்களில் தம்பியை வீழ்த்தி அண்ணன் மகாராஜன் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த முறையும் அதே அண்ணன் – தம்பி மோதல் அரங்கேறுவது ஒட்டுமொத்த தேனி மாவட்டத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. “வீட்டுக்குள்ள அண்ணன் தம்பியா இருந்தாலும், களத்துல அவங்க ரெண்டு பேரும் சிங்கம் – புலி மாதிரி மோதுறாங்களே!” எனத் தொண்டர்கள் வியந்து கமெண்டுகளைத் தட்டி வருகின்றனர்.
கடந்த தேர்தலில் சுமார் 8,500 வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணனிடம் வெற்றியைப் பறிகொடுத்த தம்பி லோகிராஜன், இந்த முறை எப்படியாவது ‘ரிவெஞ்ச்’ எடுத்துவிட வேண்டும் எனத் தீவிரப் பிரச்சாரத்தில் குதித்துள்ளார். அதேசமயம், தொகுதியில் தனக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து ‘ஹேட்ரிக்’ வெற்றியைப் பதிவு செய்ய அண்ணன் மகாராஜன் படுவேகமாகக் காய் நகர்த்தி வருகிறார்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள், “என்னப்பா இது… ஒரே குடும்பத்துக்குள்ளயே இப்படி ஒரு ரத்த சரித்திரம் ஓடுது!” எனச் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளனர். இந்த ‘பாசப் போராட்டத்தில்’ ஆண்டிபட்டி மக்கள் யாருக்கு மகுடம் சூட்டப் போகிறார்கள் என்பதுதான் இப்போதைய ஹாட் டாபிக்!
