பீகார் மாநிலம் பாட்னாவில், மழை வெள்ளத்தில் தேங்கிய பள்ளத்தில் கார் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், சாலை பராமரிப்பு இல்லாமை குறித்து அரசு மீது வழக்கம்போலக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் வாகன உரிமையாளர் அதனை மறுத்துள்ளார். அதாவது கடந்த வெள்ளிக்கிழமை, பாட்னாவில் ஐந்து பேருடன் சென்று கொண்டிருந்த சொகுசு கார், சாலையில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், காரில் இருந்தவர்கள் யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை. காரை ஓட்டியவர் ஒரு  பெண் ஆவார்.

சம்பவத்தையடுத்து, பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “இது ஒரு சாதாரண விபத்தல்ல; அரசை அவமதிப்பதற்கான சதி” என்றார். மேலும், “நாங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் தொடர்பு கொண்டோம். டிஎம் (மாவட்ட ஆட்சியர்) உடனும் பேசினோம். தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இது ஒரு திட்டமிட்ட செயலாகவே எனக்குத் தெரிகிறது,” என்றார்.

 

அதிகாரிகள் சாலையில் பள்ளம் தோண்டி விட்டு, அதனை 20 நாட்களுக்கும் மேலாக மூடாமல் விட்டதாகவும், தற்போது பருவமழை காரணமாகப் பள்ளத்தில் மழைத் தண்ணீர் தேங்கி குளம்போல் இருந்ததாகவும் கூறினார். “அந்த இடத்தில் எந்தவிதமான எச்சரிக்கை பலகை (பேரிகார்டு) எதுவும் இல்லை. நாங்கள் 5 பேர் காரில் இருந்தோம். யாராவது ஒருவர் உயிரிழந்திருந்தால், யார் பொறுப்பு?,” என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், “அதே நேரத்தில், எங்கள் காரைத் தொடர்ந்து ஒரு பைக் கூட அந்த பள்ளத்தில் விழுந்தது. அப்பகுதி மக்கள், தினமும் ஒருவராவது அந்த பள்ளத்தில் விழுவதாகவே கூறுகிறார்கள். இவை அனைத்தும் ஆளும் அரசின் அலட்சியம், பொறுப்பற்ற தன்மை, அல்லது அரசியல் பின்னணியுடைய சதி எனக் கருதுகிறேன்,” என்றார். மேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தினரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.