கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலாவில் உள்ள ‘மெஹர் மணி & கிரில்ஸ்’ (Meher Mani & Grills) என்ற உணவகம், மலையாள புத்தாண்டு தினமான விஷு பண்டிகையன்று வெளியிட்ட விளம்பரப் பேனர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்துக்களின் புனிதமான பண்டிகை நாளில், பகவான் கிருஷ்ணர் அசைவ உணவை உண்பது போன்ற ஒரு படத்தை அந்த உணவகம் விளம்பரத்திற்காகப் பயன்படுத்தியுள்ளது.
வட சந்தை ஜூமா மசூதிக்கு அருகில் அமைந்துள்ள இந்த உணவகத்தின் உரிமையாளர் முகமது ஷமீர் என்பதும், இவர் உள்ளூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இந்த விளம்பரம் இருப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் கண்டனங்கள் வலுத்தன.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, உணவகத் தரப்பில் மன்னிப்பு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்த விளம்பர பேனரை வடிவமைக்கும் பணியை வெளி நிறுவனத்திடம் (Outsource) ஒப்படைத்திருந்ததாகவும், கிராஃபிக் டிசைனர் செய்த தவறால் இந்தத் தவறு நடந்துவிட்டதாகவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இருப்பினும், புனிதமான பண்டிகை நாளில் திட்டமிட்டே இத்தகைய வெறுப்பு பிரச்சாரம் செய்யப்பட்டதாகப் பலரும் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
