அசாமில் மூன்று வேறு சம்பவங்களில், ஏற்கனவே இறந்த நாகப்பாம்பு மற்றும் கருப்பு கிரெய்ட் பாம்புகள் மனிதர்களை கடித்து விஷம் பரவியுள்ளதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
சிவசாகர் மற்றும் காம்ரூப் மாவட்டங்களில் நடந்த இந்த சம்பவங்கள் குறித்து ‘ஃபிரான்டியர்ஸ் இன் டிராபிகல் டிசீஸஸ்’ இதழில் ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது. இதில், ஒரு சம்பவத்தில் கோழிகளை உண்ண வந்த பாம்பின் தலையை வெட்டியபோதும், உடலை அப்புறப்படுத்தும்போது அது கடித்துள்ளது.
மற்றொரு சம்பவத்தில், டிராக்டரால் நசுங்கி இறந்த நாகப்பாம்பே விவசாயியை கடித்தது. மேலும், வீட்டு வளாகத்தில் கொல்லப்பட்ட கருப்பு கிரெய்ட் பாம்பின் தலையை தொட்ட அண்டை வீட்டுக்காரரின் கையில் விஷம் புகுந்து உடல்நிலை பாதிக்கப்பட்டது.
மூவரும் கடுமையான வலி, வீக்கம், சோர்வு, தூக்கமின்மை போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் தப்பினர். விஷத்துக்கு உடனடி சிகிச்சையாக ஆன்டிவெனம்கள் அளிக்கப்பட்டதால் அவர்கள் குணமடைந்தனர். இதுகுறித்து நிபுணர்கள், “பாம்புகள் குளிர் இரத்த உயிரினங்கள்.
அவை தலை துண்டிக்கப்பட்டாலும் அல்லது கொல்லப்பட்டாலும் மூளை இன்னும் சில மணி நேரம் செயல்படும். அந்நேரத்தில் யாராவது அதன் தலை அல்லது கழுத்தைத் தொட்டால், அது அனிச்சையாக கடித்து விஷம் பரவ வாய்ப்பு உள்ளது” என எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால், இறந்த பாம்புகளும் கூட ஆபத்தானவை என்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
