மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெற்றுவரும் அர்ச்சனா திவாரி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி திடீரென காணாமல் போனார். சிவில் நீதிபதி தேர்வுக்கும் தயாராகி வந்த அவர், அன்று இந்தூரிலிருந்து கட்னி செல்ல நர்மதா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார்.
ஆனால், கட்னி ரயில் நிலையத்தில் இறங்க வேண்டிய நிலையில், ரயிலில் இருந்த அவரது பை மட்டும் உமாரியா ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதேநேரம் அவரது மொபைலும் அணைக்கப்பட்டதால், குடும்பத்தினர் மிகுந்த பதட்டத்தில் காவல்துறையை அணுகினர்.
இந்த தகவலைத் தொடர்ந்து, போபால் ரயில்வே காவல்துறை (GRP) அர்ச்சனாவைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டது. சிசிடிவி காட்சிகள், மொபைல் சிக்னல்கள் மற்றும் ரயில் பயணப் பதிவுகள் ஆகியவற்றை மூலமாக வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், ஒரு போலீஸ் கான்ஸ்டபிள், அர்ச்சனாவுக்காக முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்திருப்பது தெரியவந்தது. இது விசாரணையை சந்தேகத்துக்குள்ளாக்கியது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அர்ச்சனா உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கிரியில், இந்தியா-நேபாள எல்லைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். GRP SP ராகுல் குமார் லோதா, “அர்ச்சனா திவாரி தற்போது குணமடைந்து வருகிறார். அவரை பாதுகாப்பாக போபாலுக்கு அழைத்து வருவோம். தொடர்ந்து விசாரணை நடைபெறும்” என கூறியுள்ளார். GRP குழுவினர் அர்ச்சனாவை அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அர்ச்சனா திவாரி காணாமல் போன 12 நாட்களில், அவர் எங்கே தங்கினார்? யார் அவரை அப்பகுதிக்கு அழைத்துச் சென்றார்? ஏன் அவர் தன்னிடமிருந்த மொபைலை அணைத்தார்? இவை அனைத்தும் தற்போது காவல்துறையின் விசாரணை கேள்விக்குறிகளாக இருக்கின்றன. போபாலுக்கு அவர் திரும்பியதும், முழுமையான வாக்குமூலம் பெற்று, இந்த மர்ம சம்பவத்தின் பின்னணி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
