வீட்டுக் கடன் மற்றும் இதர கடன்களைப் பெற வரும் வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் விருப்பமின்றி காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பிற நிதி தயாரிப்புகளை (Third-party financial products) கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக் கூடாது என்று வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடன்களை அனுமதிக்கும் நிபந்தனையாக இந்த காப்பீடுகளை வாங்குமாறு வாடிக்கையாளர்களை வற்புறுத்தக் கூடாது என்றும், அவ்வாறு செய்வது ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் பாதுகாப்பு விதிகளுக்கு எதிரானது என்றும் மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. இனிவரும் காலங்களில், கடன் பெற வரும் வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு போன்ற கூடுதல் திட்டங்கள் முற்றிலும் அவர்களின் சுய விருப்பத்தின் பேரிலேயே வழங்கப்பட வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடுமையான தடையை விதித்துள்ளது.
வங்கிகள் தங்களின் வருவாயை அதிகரிப்பதற்காக, கடன் வாங்குபவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி இதுபோன்ற தேவையற்ற காப்பீட்டு பாலிசிகளை திணிப்பதாக எழுந்த தொடர் புகார்களை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதிகளின்படி, கடன் விண்ணப்பங்களின் போதோ அல்லது கடன் தொகையை வழங்கும் போதோ எந்தவொரு கூடுதல் நிதி தயாரிப்புகளையும் வங்கிகள் வாடிக்கையாளர்கள் மீது பலவந்தமாக சுமத்த முடியாது. மேலும், கடன் வாங்குபவர்களுக்கு அதுகுறித்த முழு விபரங்களையும், அது கட்டாயமில்லை என்பதையும் வங்கிகள் வெளிப்படையாக விளக்க வேண்டும் என்றும், மீறும் வங்கிகள் மீது கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் பாயும் என்றும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இந்த அதிரடி உத்தரவு நடுத்தர வர்க்க கடன் வாங்குபவர்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
