சென்னை அயனாவரம் பகுதியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வசிக்கும் கல்லூரி மாணவர்கள் ஆதி மற்றும் அபினேஷ் ஒரே கல்லூரியில் பயின்று வந்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு, அபினேஷ் தனியாக நடந்து சென்றபோது அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி கும்பலுடன் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, அபினேஷ் “என்னுடன் தான் இருக்கிறான்… முடிந்ததை செய்யுங்கள்” என தன்னுடைய வீட்டு முகவரியை ஆதி கூறியுள்ளார்.
இதையடுத்து, பழிவாங்கும் நோக்கத்தில் செவ்வாய்கிழமை இரவு ஹெல்மெட் முகக்கவசம் அணிந்தபடி ரவுடிகள் குழுவாக ஆதி வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது அங்கு இருந்த ஆதி, அபினேஷ் மற்றும் அவர்களின் நண்பர் அப்துல்லாவை சரமாரியாக வெட்டினர். திடீர் தாக்குதலால் பயமடைந்த வீட்டிலிருந்த பெண்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த கும்பல் தப்பிச் சென்றது.
காயமடைந்த ஆதி, அபினேஷ் மற்றும் அப்துல்லா ஆகியோர் உடனடியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து ஆதி தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் சம்பவத்தில் தொடர்புடைய ரவுடிகள் சிலம்பரசன், சூர்யா உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
