மகாராஷ்டிர மாநிலத்தில் முதல் மனைவி உயிரோடு இருக்கும்போதே அவரிடம் விவாகரத்து பெறாமல், போலீஸ் காவலர் ஒருவர் இன்னொரு திருமணம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல் துறையில் பணியாற்றி வரும் பிரசாந்த் கஜபாரே என்ற அந்த நபர், வீட்டாரிடம் “வேலைக்குச் செல்கிறேன்” என்று பொய் கூறிவிட்டு ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கிருஷ்ணா திருமண மண்டபத்திற்கு வந்துள்ளார்.
இந்த விபரம் அறிந்து அங்கு வந்த அவரது முதல் மனைவி, “விவாகரத்து தராமல் எப்படி இரண்டாவது திருமணம் செய்யலாம்?” என நியாயம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த போலீஸ் ஊழியர், சுற்றிலும் மக்கள் இருப்பதைக்கூட பொருட்படுத்தாமல் தனது முதல் மனைவியை கொடூரமாக தாக்கியுள்ளார்.
அங்கிருந்தவர்கள் யாரும் தடுக்காமல் வேடிக்கை பார்த்த நிலையில், இந்த கொடூரத் தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, போலீஸார் தற்பொழுது அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
