உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்தது. ஆசியா என்ற பெண்ணை அவரது கணவர் மூன்று தலாக் கூறி விவாகரத்து செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, கணவர் அவரை திட்டி, தகாத வார்த்தைகளால் தாக்கினார். இதனால் கோபமடைந்த ஆசியா, தனது செருப்பை கழற்றி, கணவரை துரத்தி துரத்தி அடித்தார். அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி பிரித்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராம்பூரின் பமன்பூர் கஜூரியா பகுதியைச் சேர்ந்த ஆசியாவின் திருமணம், கஜூரியா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்தது. கணவர்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்னைகளால், பிரிந்து வாழும் நிலை ஏற்பட்டது. ஆசியா, கணவரிடமிருந்து செலவுக்கு பணம் கேட்டு குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வெள்ளிக்கிழமை அந்த வழக்கின் விசாரணைக்காக ஆசியா தனது மாமியுடன் நீதிமன்றத்திற்கு வந்தார். அதேவேளை, கணவர் தனது தந்தையுடன் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.

விசாரணை முடிந்து வெளியே வந்தபோது, ஆசியாவின் கணவர் மற்றும் மாமனார் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, மூன்று தலாக் கூறி விவாகரத்து செய்ததாக ஆசியா குற்றம்சாட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, கணவர் மற்றும் மாமனார் அவரை தாக்க முயன்றனர். ஆத்திரமடைந்த ஆசியா, செருப்பால் கணவரை தாக்கினார். இந்த மோதலை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்த நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.