மத்திய பிரதேஷ் மாநிலம் ஷஹதோல் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மீண்டும் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. பிரசவ வலியால் துடிக்கும் பெண்கள் பாதுகாப்பான சிகிச்சைக்காக வரும் பிரசவ அறையில், இன்டர்ன் பெண் மருத்துவர்கள் கைகலப்பு மற்றும் அடிதடியில் ஈடுபட்டனர். இதனால், அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த பெண்கள் பயத்தில் உறைந்தனர். பாதிக்கப்பட்ட மருத்துவர் ஷிவானி லக்ஷியா, தனது சக மருத்துவர்களான சானு அகர்வால் மற்றும் யோகிதா தியாகி ஆகியோர் தன்னைத் தாக்கியதாகவும், முடியைப் பிடித்து தரையில் தள்ளியதாகவும், ஆடைகளைக் கிழித்ததாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவத்தை செவிலியர்கள், காவலர்கள் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்கள் பார்த்ததாகவும், அவர்கள் சாட்சிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் குறித்த வீடியோ வெளியாகி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இந்த வைரலான வீடியோ மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தையும் சுகாதாரத் துறையையும் அதிரவைத்துள்ளது. இதற்கு முன்பும் இந்த இன்டர்ன் மருத்துவர் பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதாகத் தகவல் உள்ளது. மற்றொரு வீடியோவில், பிரசவத்தின் போது மருத்துவரைத் தாக்கி, அவரது கைபேசியைப் பறித்ததாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவரும் மற்ற பணியாளர்களும் குற்றம்சாட்டப்பட்ட மருத்துவரை இடைநீக்கம் செய்யவும், குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் மருத்துவக் கல்லூரியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பெண் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து கல்லூரி கண்காணிப்பாளர் டாக்டர் நாகேந்திர சிங், விசாரணைக் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
