பணப் பேராசையும், குறுகிய கால ஆத்திரமும் மனிதர்களை எந்த அளவிற்கு மிருகங்களாக மாற்றும் என்பதற்கு குஜராத் மாநிலத்தில் அரங்கேறியுள்ள இந்த கொடூரச் சம்பவமே சாட்சியாக மாறியுள்ளது. வெறும் ஐந்தாயிரம் ரூபாய் கடனுக்காக, இரண்டு பிஞ்சுக் குழந்தைகளின் தாயை நடுரோட்டில் உயிரோடு தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிங்கி பட்னி (35) என்ற பெண்மணி, சாலையோரம் பழம் மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் தனது குடும்ப அவசரச் செலவுக்காக, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாபு ராவல் என்பவரிடம் இருந்து 5,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். பணத்தைக் கொடுத்த பாபு ராவல், அன்றாடப் பணத்தை அந்தப் பெண்ணை வட்டியுடன் திருப்பித் தருமாறு கூறி அநாகரிகமான முறையில் வற்புறுத்தியும் மிரட்டியும் வந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவம் அன்று பண விவகாரம் குறித்துப் பேசுவதற்காக மற்றொரு அண்டை வீட்டுக்காரரின் இடத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, பிங்கியைப் பின்தொடர்ந்து வந்த பாபு ராவல், தான் திட்டமிட்டு எடுத்து வந்திருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய திரவத்தை திடீரென பிங்கி மீது ஊற்றி, கண் இமைக்கும் நேரத்தில் தீ வைத்துள்ளார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிய, அலறித் துடித்தபடி அந்தப் பெண் நடுரோட்டிற்கு ஓடி வந்துள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது மரண வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தத் தாக்குதலின் போது, குற்றவாளியான பாபு ராவல் மீது எதிர்பாராத விதமாகத் தீப்பற்றியதில், அவனுக்கு 40 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் பலத்த போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வெறும் 5,000 ரூபாய் பணத் தகராறு மட்டும் தான் இந்த கொடூரக் கொலைக்குக் காரணமா, அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் விபரீதக் காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தாயை இழந்து தவிக்கும் அந்த இரண்டு குழந்தைகளின் நிலை அங்கிருந்தோரின் நெஞ்சை உலுக்கியுள்ளது.
