இன்றைய டிஜிட்டல் உலகில் மொபைல் போன் இல்லாத மனிதர்களே இல்லை என்ற நிலைக்கு நாம் வந்துவிட்டோம். ஆனால், அதே மொபைல் போன் மூலமாக நமது வாழ்நாள் சேமிப்பு ஒரே நொடியில் மாயமாகும் அவலமும் அரங்கேறி வருகிறது. ஆன்லைன் மோசடி மற்றும் சைபர் குற்றங்களால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் பணத்தை இழந்து கண்ணீரில் மூழ்கி வருகின்றனர்.
இந்த அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் இப்போது ஒரு அதிரடியான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இனி சைபர் குற்றவாளிகள் தப்பவே முடியாது என்ற அளவுக்கு காவல்துறை, வங்கிகள், டெலிகாம் நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் தளங்கள் அனைத்தும் கைகோர்த்து ஒற்றைப் புள்ளியில் இணைய வேண்டும் என்று கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ஒரு பெண் ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கித் தனது பணத்தை இழந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் கடுமையான கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். “பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களின் வாழ்நாள் சேமிப்பை சில நிமிடங்களிலேயே இழந்து விடுகிறார்கள். ஆனால், அதை விசாரித்து குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்குள் போலீசாருக்குப் பல நாட்கள் ஆகிவிடுகிறது. இந்தத் தாமதம் ஒட்டுமொத்த விசாரணை அமைப்பையே கேலிக்குள்ளாக்குகிறது” என்று கோர்ட் சாடியுள்ளது.
இந்த விசாரணையின் போது ஜபல்பூர் காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி, சைபர் குற்றவாளிகள் போலிக் கணக்குகள் மற்றும் டெலிகிராம் போன்ற ரகசிய செயலிகளைப் பயன்படுத்துவதாகவும், பிற மாநில போலீசாரின் ஒத்துழைப்பு கிடைக்கத் தாமதமாவதே இதற்கு முக்கியக் காரணம் என்றும் தன் குமுறலை நீதிமன்றத்தில் கொட்டினார்.
விசாரணையில் இருக்கும் இந்த முட்டுக்கட்டைகளை உடைத்தெறிய நீதிமன்றம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தத் தாமதங்கள் அனைத்தும் குற்றவாளிகளுக்கே சாதகமாக முடிவதால், நாடு தழுவிய அளவில் ஒரு வலுவான இரும்புத் திரையை உருவாக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சகம், தொலைத்தொடர்புத் துறை மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவற்றை இந்த வழக்கில் நீதிமன்றம் இணைத்துள்ளது.
சைபர் குற்றம் நடந்த உடனேயே பாதிக்கப்பட்டவர் புகாரளிப்பது, வங்கிகள் நொடிப்பொழுதில் அந்தக் கணக்குகளை முடக்குவது, டெலிகாம் மற்றும் ஆன்லைன் நிறுவனங்கள் குற்றவாளிகளின் விபரங்களை உடனுக்குடன் காவல்துறையிடம் பகிர்வது என ஒரு ‘ராணுவக் கட்டுக்கோப்புடன்’ அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், அப்போதுதான் இந்த டிஜிட்டல் கொள்ளையர்களை ஒடுக்க முடியும் என்றும் நீதிமன்றம் மிகத் தெளிவாக எச்சரித்துள்ளது.
