உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், லஞ்ச ஒழிப்புத்துறை  நடத்திய அதிரடி வேட்டையில், ஜிஎஸ்டி துறையின் பெண் துணை கமிஷனர் ஒருவர் ₹50,000 லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அரசு அதிகாரிகள் மற்றும் வணிக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வாரணாசி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது ஜிஎஸ்டி கோப்புகளைத் தீர்வு செய்வதற்காக ஜிஎஸ்டி அலுவலகத்தை அணுகியுள்ளார். அப்போது, அங்கிருந்த பெண் துணை கமிஷனர், கோப்புகளை முடித்துக் கொடுக்க ₹50,000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த தொழிலதிபர், உடனடியாக மாநில லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். புகாரை ரகசியமாக விசாரித்து உறுதி செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அந்த பெண் அதிகாரியைப் பிடிக்க ஒரு சாதுரியமான திட்டத்தைத் தீட்டினர்.

அதன்படி ஒரு சொகுசு உணவகத்தில் வைத்து பணத்தைக் கொடுப்பதாக அந்த அதிகாரிடம் தொழிலதிபர் கூறியுள்ளார். இதனை நம்பி அங்கு வந்த பெண் அதிகாரி, தொழிலதிபரிடம் இருந்து ₹50,000 பணத்தைப் பெற்றுக் கொண்ட தருணத்தில், அங்கு சாதாரண உடையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரைச் சூழ்ந்து கொண்டு அதிரடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டபோது, அந்த பெண் அதிகாரி போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கும் அவருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. எனினும், லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை லாவகமாகக் கட்டுப்படுத்தி தங்கள் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இந்த அதிகாரி மீது லஞ்ச ஒழிப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணைக்குப் பிறகே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என்றாலும், இந்த அதிரடி கைது நடவடிக்கை வாரணாசி அரசுத் துறையினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.