ஃபேஸ்புக் காதலியை தேடி, விசா இல்லாமல் பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய வாலிபர் ஒருவர், அங்குள்ள சிறையில் தவித்து வரும் சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தண்டனைக் காலம் முடிந்த பிறகும், அவர் தாயகம் திரும்ப முடியாமல் லாகூர் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளதால், அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் இந்திய அரசிடம் உதவி கேட்டுப் போராடி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் நகரைச் சேர்ந்த பாதல் பாபு என்ற வாலிபர், டெல்லியில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது, ஃபேஸ்புக் மூலம் பாகிஸ்தானைச் சேர்ந்த சனா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே, காதலியை நேரில் பார்க்க பாதல் பாபு முடிவு செய்துள்ளார். கடந்த 2024 அக்டோபர் மாதம், தனது அடையாள ஆவணங்கள் அனைத்தையும் வீட்டிலேயே வைத்துவிட்டு திடீரென மாயமானார். விசா இல்லாமல் ரகசியமாக எல்லையைக் கடந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்த அவரை, சனா திருமணம் செய்ய மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த பாதல், அங்கேயே தங்கி ஒரு ஆட்டுப் பண்ணையில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
கடந்த 2024 டிசம்பர் 27 அன்று, பாதல் பாபு ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, அவரது பேச்சுவழக்கைக் கேட்டு சந்தேகமடைந்த பாகிஸ்தான் உள்ளூர் மக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சட்டவிரோதமாக ஊடுருவிய வழக்கில் பாகிஸ்தான் போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரது வக்கீல் ஏற்பாடு செய்த வீடியோ கால் மூலம், “நான் இப்போது வரமாட்டேன், கவலைப்படாதீர்கள், நான் மதமாற்றம் செய்து கொண்டேன்” என்று பாதல் பாபு குடும்பத்தினரிடம் பேசும் பதைபதைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
தற்போது லாகூரின் கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதல் பாபுவுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக் காலம் முடிந்துவிட்டது. ஆனாலும், அவரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் இன்னும் நிறைவடையாததால், அவர் தொடர்ந்து சிறையிலேயே வைக்கப்பட்டுள்ளார். தனது மகனை மீட்டுத் தருமாறு அவரது குடும்பத்தினர் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். உள்ளூர் எம்பியும் அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர், பாகிஸ்தானில் உள்ள வழக்கறிஞர்களைத் தொடர்பு கொண்டு பாதலின் விடுதலைக்காக உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
