மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியில், பாஜக கவுன்சிலர் ஒருவர் சாலையில் நடந்து சென்று போனில் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நெஞ்சை உலுக்கும் ஒட்டுமொத்த சம்பவமும் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது இணையத்தில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகரும், உள்ளூர் கவுன்சிலருமான லோகேஷ் தெஹரியா, தனது வீட்டிற்குச் சற்று தொலைவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் தனது செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டே நடந்து சென்றுள்ளார். திடீரென அவருக்கு உடல்நலக் குறைவும் நெஞ்சு வலியும் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நிலைதடுமாறிய லோகேஷ், அப்படியே சாலையிலேயே சுருண்டு விழுந்தார். இதைப் பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்து, அவரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
View this post on Instagram
இந்த திடீர் மரணச் செய்தி கேட்டதும் அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர். ஒரு மக்கள் பிரதிநிதி, இளம் வயதுடையவர் இப்படி எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் சிந்த்வாரா பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
