ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், பகல் நேரத்தில் இரு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை, அவர்களின் செல்லப் பிராணிகளான 8 நாய்கள் துரத்தித் துரத்திக் கடித்துக் குதறி ஓடவிட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காமுகன் அலறியடித்துக்கொண்டு ஓடும் இந்த திக் திக் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மெல்போர்னின் கூயோங் பகுதியில் உள்ள கார்டினர்ஸ் கிரீக் ஆற்றங்கரைப் பகுதியில், தோழிகளான இரு பெண்கள் தங்களது செல்ல நாய்களுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள புதருக்குள் பதுங்கியிருந்த மர்ம நபர் ஒருவன், திடீரென பாய்ந்து வந்து ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக இழுக்க முயன்றுள்ளான். அவரிடமிருந்து அந்தப் பெண் தப்பிக்கவே, அடுத்த கணமே அவரது தோழியைப் பிடிக்க அந்த நபர் பாய்ந்துள்ளான்.

 

பெண்களின் அலறல் சத்தம் கேட்டு, ஆபத்தை உணர்ந்த அவர்களது 8 செல்ல நாய்களும் நொடிப் பொழுதில் ஒன்று கூடின. எஜமானிகளைக் காப்பாற்ற ‘சிங்கமாய்’ சீறிய அந்த நாய் படை, அசுர வேகத்தில் அந்த நபரை நோக்கிப் பாய்ந்தது. ஆபத்தை உணர்ந்த அந்த நபர், அங்கிருந்து தப்பியோட முயன்றான். ஆனால், விடாமல் துரத்திய நாய்களில் ‘புளூ ஹீலர்’ ரகத்தைச் சேர்ந்த ஒரு பெரிய நாய், ஓடிக்கொண்டிருந்த அவனது இடது காலைக் கவ்விப் பிடித்து, அவனது கால்சட்டையைக் கிழித்துத் தொங்கவிட்டது. வலியால் அலறியபடி அவன் மோனாஷ் விரைவுச் சாலையின் சுரங்கப்பாதையை நோக்கி தலைதெறிக்க ஓடினான்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தப்பியோடிய நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அந்த நபரின் அடையாளம் கேமராவில் பதிவாகியுள்ளதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆபத்தான நேரத்தில் எஜமானிகளுக்கு அரணாக நின்று காமுகனை விரட்டியடித்த செல்லப் பிராணிகளின் விசுவாசத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.