நேபாளம் மற்றும் வட மாநில எல்லைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பீகார் மாநிலத்தின் மேற்கு பகுதியில் ஓடும் நதியில் நீர்மட்டம் அபாயக் கட்டத்தைத் தாண்டி உயர்ந்து வருவதால், காடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக, வனப்பகுதிகளில் இருக்கும் விஷ ஜந்துக்களும், வனவிலங்குகளும் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பாதுகாப்பான இடங்களைத் தேடி, அருகில் இருக்கும் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்குள் கூட்டம் கூட்டமாக ஊடுருவத் தொடங்கியுள்ளது.‌

இந்த நிலையில், முன்னி லால் என்பவரது வீட்டிற்குள், வெள்ளத்தில் இருந்து தப்பிக்க வழி தேடி வந்த சுமார் 10 அடி நீளமுள்ள பிரம்மாண்ட கருநாகப் பாம்பு ஒன்று திடீரென புகுந்தது. சமையலறைப் பகுதியில் அந்த அசுர வேக விஷப் பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்ட குடும்பத்தினர் மரண பயத்தில் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்து கிராம மக்களும் அந்தப் பாம்பின் நீளத்தைப் பார்த்து மிரண்டு போயினர்.

இதனால் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பதற்றமும் பீதியும் நிலவியது.‌ அப்போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் பாம்பாட்டியும், ‘பாம்புத் தோழி’ என்றும் அழைக்கப்படுபவருமான ஜானகி தேவிக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சற்றும் தாமதிக்காமல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜானகி தேவி, எந்தப் பதற்றமும் இன்றி, அசாத்திய பொறுமையோடும் சமயோசித புத்தியோடும் அந்தப் பிரம்மாண்ட நாகப்பாம்பை லாவகமாகப் பிடித்தார்.

மேலும், அந்தப் பாம்பின் தலைப்பகுதியைத் தனது ஒற்றைக் கையால் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, அதன் எஞ்சிய நீளமான உடற்பகுதியைத் தனது கழுத்தில் ஒரு துண்டு போலச் சுற்றிக் காட்சியளித்தார். இதைப் பார்த்த கிராம மக்கள் திகைப்பில் உறைந்து போயினர். பின்னர், அந்தப் பாம்பிற்கு எந்தக் காயமும் ஏற்படாதவாறு, அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று ஜானகி தேவி பத்திரமாக விடுவித்தார். அதன் பின்னரே கிராம மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

“>

இதற்கிடையே, காடுகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால், பாம்புகள் மற்றும் ஆபத்தான வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவதால், தற்போது வனத்துறை எச்சரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் வீட்டைச் சுற்றிலும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், வீடுகளுக்குள் பாம்புகள் நுழைந்தால் அவற்றைக் கொல்லாமல், உடனடியாகத் தங்களுக்கு அல்லது பயிற்சி பெற பாம்பு பிடிப்பவர்களுக்குத் தகவல் தெரிவிக்குமாறு வனத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.