குருகிராமின் செக்டர்-71 தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியை வைத்து நண்பனிடம் காட்ட முயன்றபோது, அது எதிர்பாராதவிதமாக இயங்கியதில் 28 வயது இளைஞர் ஒருவர் தலைப்பகுதியில் தோட்டா பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் வியாழக்கிழமை அன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி, குற்றம் சாட்டப்பட்ட வாலிபர் தனது தந்தையின் ரிவால்வரை எடுத்து, அதில் தோட்டாக்கள் இருப்பதை கவனிக்காமல் விளையாட்டாகவும், பெருமைக்காகவும் நண்பனிடம் காட்டியுள்ளார்.

அப்போது மிக அருகாமையில் இருந்து எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்ததில், தோட்டா நேரடியாக அவரது நண்பனின் தலையைத் தாக்கியுள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பாதுகாப்பு விதிகளை மீறி துப்பாக்கியை அஜாக்கிரதையாகக் கையாண்டது மற்றும் உயிரிழப்புக்குக் காரணமானது போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட இளைஞரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.