நெல்லை கவின் கொலையின் வடு மறைவதற்குள், திருவள்ளூரில் மற்றொரு ஆணவக்கொலை நடந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பொன்னேரி பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக (VAO) பணியாற்றி வந்த அருணா என்பவர், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சக VAO ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு அருணாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அருணா மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
அருணாவின் காதலன் அளித்துள்ள புகாரில், காவல்துறை அதிகாரியாக இருக்கும் அருணாவின் அண்ணன் மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து, அவரை அடித்துத் துன்புறுத்தி, வாயில் விஷத்தை ஊற்றி ஆணவக்கொலை செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு அரசு அதிகாரிக்கே இந்த நிலைமையா எனப் பொதுமக்கள் வேதனை தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
