திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி கஞ்சா போதையில் இருந்த சிறுவர்களால் வடமாநில இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.

படுகாயமடைந்த அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் அங்கிருந்து மாயமாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள நயினார் நாகேந்திரன், திமுக அரசின் மெத்தனப் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து நயினார் நாகேந்திரன் எழுப்பியுள்ள முக்கியக் கேள்விகள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரைப் பாதுகாக்கக் கூடத் தமிழகக் காவல்துறைக்குத் திராணியில்லையா?

அந்த இளைஞர் பிழைத்து வந்தால் அரசியல் சிக்கல் ஏற்படும் என நினைத்துத் திட்டமிட்டே காணாமல் போகச் செய்யப்பட்டாரா அல்லது அவர் கொலை செய்யப்பட்டாரா?

வடமாநிலத்தவர் மீது திமுக தலைவர்கள் வன்மத்தைக் கக்கி வருவதையே இது காட்டுகிறது; காவல்துறையினர் திமுகவின் பிளவுவாத அரசியலுக்குத் துணை போகிறார்கள்.

தமிழகத்தை இந்திய அளவில் தலைகுனிய வைக்கும் இந்தச் சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.