தீபாவளி என்பது ஒளி மற்றும் மகிழ்ச்சியின் பண்டிகை. ஆனால் சிலர் சமூக ஊடகங்களில் லைக்குகள், பார்வைகள் பெறுவதற்காக தங்கள் உயிரையே ஆபத்தில் இட்டுக்கொண்டு ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுகின்றனர். இத்தகையதொரு சம்பவம் உத்தரபிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் நடந்துள்ளது.

திங்கள்கிழமை இரவு, ஓடும் காருக்குள் இருந்த ஒரு நபர் பட்டாசுகளை வெடித்த சம்பவம் கேமராவில் பதிவாகி, அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

வீடியோவில், வெள்ளை நிற கார் ஒன்றில் இருந்தவர்கள் வாகனத்தின் ஜன்னல்களில் இருந்து பட்டாசுகளை வெடிக்கச் செய்துள்ளனர். மேலும், சில பட்டாசுகள் காரின் கூரையில் வைக்கப்பட்டு தொடர்ச்சியாக வெடிப்பதையும் காட்சியில் காண முடிகிறது. இந்தச் செயல், காரில் இருந்தவர்களின் உயிருக்கு மட்டுமல்ல, சாலையில் சென்ற மற்றவர்களுக்கும் கடும் ஆபத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் லக்னோவின் சௌக் பகுதியில், குறிப்பாக கே.ஜி.எம்.யூ டிராமா சென்டர் அருகே நடந்ததாகக் கூறப்படுகிறது.

 

 

இந்த சம்பவம் பற்றிய வீடியோ பரவியதும் சமூக வலைதளங்களில் பலரும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். காரில் இருந்தவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், சிலர் மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை குறித்து கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், லக்னோ போலீசார் சம்பவத்தை கவனத்தில் கொண்டு விசாரணை தொடங்கியுள்ளனர். அதிகாரிகள் தெரிவித்ததாவது:

மேலும் “போக்குவரத்து போலீசாரும், உள்ளூர் காவல் நிலையமும் சம்பவத்தைப் பற்றி விசாரித்து வருகின்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. அடையாளம் காணப்பட்டவுடன் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.