மும்பை நகரில் நள்ளிரவு நேரத்தில் கைவிடப்பட்டிருந்த ஒரு புதிதாகப் பிறந்த குழந்தையை, காவல்துறை அதிகாரிகள் துரிதமாக மீட்டனர். மனிதநேயம் கலந்த இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
போலீஸ் தகவலின்படி, பங்கூர் நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கோரேகான் பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவில் ரோந்துப் பணியில் இருந்த பீட் மார்ஷல்கள், சாலையோரத்தில் இருந்து குழந்தையின் அழும் சத்தத்தை கேட்டனர். உடனே அந்த இடத்துக்குச் சென்ற அதிகாரிகள், நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வேன்களுக்கு இடையில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் ஒரு குழந்தை கைவிடப்பட்டிருப்பதை கண்டனர்.
அதனைத் தொடர்ந்து, நிர்பயா படையின் உதவியுடன் குழந்தை உடனடியாக சதாப்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது. அங்கு மருத்துவர்கள் அவசர சிகிச்சை அளித்து, குழந்தை பாதுகாப்பாகவும் சீரான உடல்நிலையிலும் இருப்பதாக தெரிவித்தனர்.
While patrolling the @BangurNagarPS Beat Marshals at around midnight discovered that an unidentified couple had abandoned a newborn baby in an open area between two vans.
Upon inspection, the newborn was immediately taken to Shatabdi Hospital for medical treatment with the… pic.twitter.com/ZnTijOCDl5
— मुंबई पोलीस – Mumbai Police (@MumbaiPolice) October 21, 2025
மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு, குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பங்கூர் நகர் காவல்துறையினரால் காவலில் எடுக்கப்பட்டது. பின்னர், அந்தேரி (மேற்கு) பகுதியில் உள்ள செயிண்ட் கேத்தரின் இல்லம் எனும் குழந்தை பராமரிப்பு மையத்தில் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், குழந்தையை கைவிட்ட நபர்களை அடையாளம் காண காவல்துறை விசாரணை தொடங்கியுள்ளது. சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பொருத்தமான பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாதவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவத்தை மும்பை காவல்துறை தங்களது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். குழந்தையை மீட்ட அதிகாரிகளின் விரைவான நடவடிக்கை மற்றும் மனிதநேய உணர்வுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
