உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தின் நவாப்கஞ்ச் பகுதியில், 2  காளைகள் திடீரென சண்டை போட்டு பரபரப்பை ஏற்படுத்தின. சாலையோரம் சண்டைபோட்ட அந்த காளைகள், சில நிமிடங்களில் அருகிலிருந்த டீ கடையிற்குள் பாய்ந்து, அங்கிருந்த மேசைகள், நாற்காலிகள், பொருட்கள் அனைத்தையும் நொறுக்கின.

இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் அங்கு அமைந்திருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சம்பவத்தின்போது டீ கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் பதற்றத்தில் தங்கள் உயிரைப் பாதுகாக்க ஓடி தப்பினர். அவர்களில் யாருக்கும் பெரிய காயம் ஏற்படாதது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆனால் கடையின் உள்ளமைப்புகள் முழுமையாக சேதமடைந்தன. இத்தகைய காட்சிகள் கடந்த சில மாதங்களாக அடிக்கடி நடைபெற்று வரும் நிலையில், இது மக்களிடையே பாதுகாப்பு குறித்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்தும், சாலை ஓரங்களில் சுற்றித் திரியும் காளைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டுகின்றனர்.

வாகன விபத்துகள், கடை சேதங்கள், பொதுமக்கள் பீதியில் வாழும் நிலை போன்றவை தொடர்ந்து நடக்கிறது. இதை கட்டுப்படுத்த அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் உடனடியாக திட்டமிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.