மத்தியப் பிரதேசத்தில் சத்னாவிலிருந்து பன்னாவுக்குப் பேருந்தில் பயணித்தபோது தனக்கு நேர்ந்த அத்துமீறல் சம்பவம் குறித்து கவுரவி பரப் என்ற பெண், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்டுள்ளார்.
பேருந்தில் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, தன் இருக்கை அருகே வந்து நின்ற இரண்டு சிறுவர்களில் ஒருவன், செல்ஃபி எடுப்பது போல் பாசாங்கு செய்து, தனது சம்மதமின்றிப் புகைப்படங்களை எடுத்ததைக் கையும் களவுமாகப் பிடித்தார் கவுரவி.
உடனடியாக அவரைப் போனைச் சரிபார்க்கச் சொன்னபோது, சிறுவன் முதலில் மறுத்து சத்தம் போட்டதால், இறுதியில் போனைத் திறந்தான். அதில், தனது அனுமதியின்றி எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கவுரவி, அந்தச் சிறுவனின் போனை எடுத்துக் கொண்டு, அவர்களை பன்னா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
View this post on Instagram
“>
காவல் நிலையம் சென்றதும், போலீசார் முன்னிலையில் அந்தச் சிறுவன் தான் தவறுதலாகச் செய்துவிட்டதாக ‘அக்கா’ என்று அழைத்து மன்னிப்புக் கேட்டுள்ளான். இருப்பினும், தனிப்பட்ட கண்ணியத்தை மீறும் இச்செயலுக்கு மன்னிப்பு போதாது என்று கூறிய கவுரவி பரப், சட்டத்தின் பயத்தை அவர்களுக்கு உணர்த்தவே காவல் நிலையத்திற்கு அழைத்து வந்ததாகத் தெரிவித்தார்.
நீதிமன்ற வழக்காக இருந்தால் மீண்டும் விசாரணைக்காகப் பயணிக்க வேண்டி வரும் என்பதால், அதைத் தவிர்த்த அவர், முறைப்படி புகார் மனுவை எழுதி, போலீசார் முன்னிலையில் அந்தச் சிறுவனின் போனில் இருந்து தனது படங்களை நீக்கிவிட்டுக் கிளம்பினார். பொது இடங்களில் பயணத்தின்போது கூடப் பெண்கள் பாதுகாப்பாக உணர முடியாதது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ள இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
