விவசாயிகளின் கடின உழைப்பில் தயாராகும் ஒவ்வொரு நெல்மணியும் வீணாகாமல் பாதுகாக்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ரூ.332.46 கோடி மதிப்பீட்டில் 10 புதிய நெல் சேமிப்பு வளாகங்கள் கட்டப்படுகின்றன.

இத்திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள நடுவூர் பகுதியில் மட்டும், ரூ.70.22 கோடி செலவில் ஒரு லட்சம் டன் கொள்ளளவு கொண்ட மிகப்பெரிய நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், முன்னாள் எம்.பி. எஸ்.ஸ். பழனிமாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கோவி. செழியனிடம், புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தெரிவித்த தி.மு.க.-விரோத கருத்துக்கள் குறித்து நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்ததாவது:

“தமிழக மக்களையே வென்றெடுக்க முடியாத நடிகர் விஜய், புதுச்சேரி மக்களை வென்றெடுப்பேன் என்கிறார். இது கூரையேறி கோழி பிடிக்காதவர், வானத்தில் பறந்து வைகுண்டம் காட்டுவேன்’ என்பதுபோல் உள்ளது. முதலில் தேர்தலில் நிற்கட்டும், சில இடங்களில் வெற்றி பெறட்டும், அதன் பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைக்கட்டும். அதைத் தொடர்ந்து புதுச்சேரி போகட்டும். மேலும் அடங்காத ஆசைக்கு அளவே இல்லாதவர் நடிகர் விஜய்.” என அவர் தெரிவித்தார்.