எண்ணூர் அருகே கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். கடலில் தத்தளித்த அவரது நண்பரை மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.
சென்னை மணலி, கலைஞர் கருணாநிதி நகரைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (17). இவர் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று மாலை ஜீவானந்தம், தனது நண்பர்களான யுவராஜ் (19), ரவி (19) மற்றும் அஜித் குமார் (20) ஆகியோருடன் எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரைக்குச் சென்றுள்ளார்.
அங்குள்ள மீன்பிடி தூண்டில் வளைவு அருகே நான்கு பேரும் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வந்த ராட்சத அலையில் சிக்கி ஜீவானந்தம் மற்றும் யுவராஜ் ஆகிய இருவரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
கரையிலிருந்த நண்பர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அங்கிருந்த மீனவர்கள், உடனடியாக கடலில் குதித்து தத்தளித்துக் கொண்டிருந்த யுவராஜை மீட்டனர். ஆனால், ஜீவானந்தம் கடலில் மூழ்கி மாயமானார்
இதுகுறித்து தகவலறிந்த எண்ணூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முரளி தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மிதவைகள் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 9 மணியளவில் ஜீவானந்தத்தின் உடல் கடற்கரையில் ஒதுங்கியது. தகவலறிந்து வந்த எண்ணூர் போலீசார், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
