தமிழகச் சட்டமன்றத்தில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது பேசிய சிபிஎம் உறுப்பினர் செல்லசாமி, அதிரடியான அரசியல் நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற போர்வையில், பாஜகவின் மறைமுக ஆட்சி அமைவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது; அதனைத் தடுக்கவே தவெக அரசுக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகிறோம்” என அவர் முழங்கினார்.

அதே சமயம், இந்த ஆதரவு என்பது வெறும் அரசியல் கணக்கு மட்டுமல்ல என்பதையும் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் நலனுக்குப் பாதகமான அல்லது எதிரான திட்டங்களை இந்த அரசு கொண்டு வந்தால், அதனை எதிர்த்து முதல் ஆளாகக் குரல் கொடுக்க சிபிஎம் ஒருபோதும் தயங்காது என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார்.

பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றைப்புள்ளியில் தவெக-வோடு கைகோர்த்துள்ள சிபிஎம்-மின் இந்த வெளியிலிருந்து ஆதரவு (Outside Support), சட்டமன்றத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “நாங்கள் ஆதரவு தருகிறோம், ஆனால் அதே சமயம் உங்களைக் கண்காணிப்போம்” என்ற பாணியில் செல்லசாமி பேசியது, ஆளுங்கட்சித் தரப்பிற்கும் ஒரு எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது.

சட்டமன்றத்தில் 107 இடங்களுடன் கம்பீரமாக நிற்கும் தவெக-விற்கு, சிபிஎம்-மின் இந்த ஆதரவு கூடுதல் பலத்தைக் கொடுத்துள்ளதோடு, எதிர்க்கட்சிகளின் வியூகங்களுக்குப் பலத்த அடியாகவும் அமைந்துள்ளது.