நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோடியக்கரையில் வனவிலங்குகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு குரங்குகள், முயல், காட்டுப்பன்றி, புள்ளிமான் போன்ற விலங்குகள் உள்ளது. இங்குள்ள விலங்குகள் இரை தேடி காட்டை விட்டு வெளியே செல்வது வழக்கம். அந்த வகையில் 4 வயது ஆண் புள்ளிமான் ஒன்று கோடியக்கரை கடற்கரையில் சுற்றிக் கொண்டிருந்தது.

இதனை பார்த்த நாய்கள் அந்த மானை விரட்டி சென்று கடிக்க முயற்சி செய்தபோது நாய்களிடமிருந்து தப்பிப்பதற்காக மான் கடலில் பாய்ந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. அப்போது வேதாரண்யம் அருகே கடினில் வயல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் அந்த பகுதி அருகே மீன்பிடிக்க சென்றபோது நாய்களை விரட்டிவிட்டு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மானை படகில் சென்று உயிருடன் மீட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பாதுகாப்புடன் காட்டுப்பகுதியில் கொண்டு விட்டுள்ளனர்.