ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியை சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆக களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் தன்னுடைய பிரிவில் கடைசி இடத்தை பிடித்து பரிதாபமாக வெளியேறியது. இதனால் இந்த அணியை அந்த நாட்டின் பல முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து வந்தார்கள்.
இந்த நிலையில் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஹாஷித் அப்ரிடி பாகிஸ்தான் அணியின் தேர்வுகுழுவில் இடம்பெற்ற ஒருவருக்கு கூட கிரிக்கெட் தெரியாது என்று விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ,” பாகிஸ்தான் தேர்வு குழுவில் தொடங்கி இயக்குனர்கள் வரை நாம் பார்க்கும் அத்தனை பேருக்கும் கிரிக்கெட் பற்றி ஒன்றுமே தெரியாது. அவர்கள் அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை. கிரிக்கெட்டை பற்றி ஒன்றுமே தெரியாதவர்களை வைத்துக்கொண்டு எப்படி உங்களால் கிரிக்கெட்டின் உள்கட்டமைப்பை சரி செய்ய முடியும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாவலர்கள் சரியாக இருந்தால் அணியும் முன்னேற்றம் அடையும்” என்று தெரிவித்துள்ளார்.
