சிவகங்கையில் அகோரி வேடமிட்ட நபரால் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அருகே உள்ள கீழக்கண்டனியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ‘அகோரி’ வேடமிட்டு வலம் வரும் மணிகண்டன் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாகப் பழக்கம் இருந்துள்ளது.
இதனால் சம்பவத்தன்று கஞ்சா போதையில் இருந்த இவர்களுக்குள் கஞ்சா வாங்குவது தொடர்பான பணத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாரிமுத்துவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
மேலும் தகவலறிந்து விரைந்து வந்த சிவகங்கை நகர் போலீசார், மாரிமுத்துவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தப்பியோட முயன்ற மணிகண்டனை போலீசார் அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், மணிகண்டன் நீண்ட காலமாகவே தன்னை ஒரு அகோரியாகக் காட்டிக்கொண்டு சுற்றியதும், சட்டவிரோதமாகக் கஞ்சா பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. போதைப்பொருள் பழக்கமும், அதனால் ஏற்பட்ட சிறு பணத் தகராறுமே ஒரு இளைஞரின் உயிரைப் பறிக்கும் அளவிற்குச் சென்றுள்ளது அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
