தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆளுநரைச் சந்தித்த பின்னரும், ஆட்சி அமைக்க அவருக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விரிவான விளக்கம் அளித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “ஒரு தேர்வில் இத்தனை மதிப்பெண் வாங்கினால்தான் தேர்வாக முடியும் என்று ஒரு விதி இருக்கும்போது, தேவையான எண்ணிக்கை (மார்க்) இல்லாமலேயே என்னைத் தேர்வு செய்யுங்கள் என்று சொல்வது அரசியல் ரீதியாகத் தவறானது” என்று குறிப்பிட்டார்.
ஆட்சி அமைக்கத் தேவையான போதிய பலம் இல்லாத காரணத்தால்தான் ஆளுநர் விஜய்யைத் திருப்பி அனுப்பியிருப்பதாக அவர் தெரிவித்தார். “தேவையான எண்ணிக்கையோடு வாருங்கள், அப்போது அனுமதி தருகிறோம் என ஆளுநர் மாளிகை தரப்பில் தெளிவாகச் சொல்லப்பட்டுவிட்டது. மக்கள் நம்பிக்கையைப் பெறாத அல்லது பெரும்பான்மை இல்லாத ஒரு அரசை ஆளுநர் எப்படி அனுமதிக்க முடியும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய்யின் இந்த முயற்சி மக்களின் நம்பிக்கையைப் பெற்றதாக ஆகாது என்றும் தமிழிசை தனது பேட்டியில் சாடியுள்ளார்.
