கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக எடில் பெர்ட் பெலிக்ஸ்(45) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் சென்ற வருடம் இங்கு படித்த மாணவி ஒருவருக்கு முத்தம் கொடுப்பது போல போட்டோ எடுத்ததோடு, அதனை தன் மொபைலில் வைத்துள்ளார். அந்த போட்டோ நேற்று சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. இதனை பார்த்த அந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோபத்துடன் பள்ளிக்குச் சென்றனர்.

அங்கு தலைமை ஆசிரியரை சரமாரியாக அடித்து உதைத்ததோடு, அவரது சட்டையை கிழித்து ஜட்டியுடன் வெளியே இழுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் தலைமை ஆசிரியரை மீட்டு பள்ளிக்குள் அழைத்துச் சென்றனர். உடனே மாணவியின்  பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதனால் தாசில்தார், விருதாசலம் டிஎஸ்பி, நெய்வேலி டிஎஸ்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி குடுத்த நிலையில் அங்கிருந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து எடில் பெர்ட் பெலிக்ஸிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.