இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் டெல்லி TO புனே போக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானம் கடந்த ஜன.12 ஆம் தேதி மாலை தயாராக இருந்தது. அப்போது ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் வெடி குண்டு உள்ளதாக விமான நிறுவனத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து விமானம் உடனே ஓடுபாதையை விட்டு தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது. வெடி குண்டு தடுப்பு பிரிவினர், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் முடிவில் வெடி குண்டு மிரட்டல் போலி என கண்டறியப்பட்டது. இந்நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அதன்பின் சிக்னல் கருவிகளை கொண்டு சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், டெல்லியைச் சேர்ந்த அபினவ் பிரகாஷ் என்பரை கைது செய்தனர். அதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அபினவ் பிரகாஷ் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் டிக்கெட் கவுன்ட்டர் பயிற்சி ஊழியராக பணிபுரிந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் புனே போக இருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தனது நண்பர்களின் தோழிகள் பயணம் செய்ய இருந்தனர். இந்த நிலையில் தோழிகள் உடன் கூடுதலாக நேரம் செலவிட ஏற்பாடு செய்யும்படி நண்பர்கள் கெஞ்சிக் கேட்டதன் படி விமானத்துக்கு போலியாக வெடி குண்டு மிரட்டல் விடுத்ததாக அபினவ் பிரகாஷ் கூறினார். இதுகுறித்து அபினவ் பிரகாஷிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.