நமது அண்டை நாடான இலங்கை, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தபோது ‘சிலோன்’ என்று அழைக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகும் தொடர்ந்த அந்தப் பெயரை, 1972-ல் சிங்கள மொழியில் ‘ஒளிரும் நிலம்’ என்று பொருள்படும் ‘இலங்கை’ என மாற்றியது. அதேபோல் தென்கிழக்கு ஆசிய நாடான ‘பர்மா’, 1989-ல் ராணுவ ஆட்சியின் போது ‘மியான்மர்’ என பெயர் மாற்றம் பெற்றது. 1939 வரை ‘சியாம்’ என்று அறியப்பட்ட நாடு, ‘சுதந்திர நாடு’ என்ற பொருளில் ‘தாய்லாந்து’ என மாறியது. 1971 போருக்குப் பின் கிழக்கு பாகிஸ்தான் ‘வங்காளதேசம்’ என்ற புதிய நாடாக உருவெடுத்ததும் வரலாற்றின் முக்கிய நிகழ்வாகும்.

ஐரோப்பிய கண்டத்தில் அமைந்த ‘மாசிடோனியா குடியரசு’, நேட்டோ அமைப்பில் இணைவதற்காகவும் அண்டை நாடான கிரீஸுடன் இருந்த முரண்பாடுகளைத் தவிர்க்கவும் 2019-ல் ‘வடக்கு மாசிடோனியா குடியரசு’ என மாற்றப்பட்டது. ஆப்பிரிக்க நாடான ‘ஜைர்’, மூன்று தசாப்த கால சர்வாதிகாரி மொபுடு செசே செகோவின் வீழ்ச்சிக்குப் பிறகு, 1997-ல் ஜனநாயக முறையை வலியுறுத்தும் வகையில் ‘காங்கோ ஜனநாயகக் குடியரசு’ என மாறியது. பழைமையான வரலாற்றைக் கொண்ட ‘பெர்சியா’, மன்னர் ரேசா ஷாவின் அறிவிப்பால் 1935-ல் ‘ஈரான்’ என உருமாறியது.

2018-ஆம் ஆண்டில் ஆப்பிரிக்க நாடான ‘சுவாசிலாந்து’ நாட்டின் மன்னர், தங்கள் நாட்டின் பெயரை ‘ஈஸ்வதினி’ என மாற்றினார். ‘சுவாசிலாந்து’  என்ற பெயர் ‘சுவிட்சர்லாந்து’  நாட்டுடன் அடிக்கடி குழப்பிக் கொள்ளப்பட்டதே இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. நெதர்லாந்து அரசு, உலகளவில் சந்தைப்படுத்துதல் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளை எளிதாக்க 2020 ஜனவரியில் ‘ஹாலந்து’ என்ற பெயரை அதிகாரப்பூர்வமாக ‘நெதர்லாந்து’ என மாற்றியது.

2022-ஆம் ஆண்டில் ‘துருக்கி’ நாடு, ஐக்கிய நாடுகள் சபையில் தனது பெயரை அதிகாரப்பூர்வமாக ‘துருக்கியே’ என மாற்றிக் கொண்டது. துருக்கியே என்ற சொல்லே தங்களது நாட்டின் பண்பாடு, நாகரிகம் மற்றும் பாரம்பரிய மதிப்புகளைச் சரியாகப் பிரதிபலிக்கும் என அந்நாடு தெரிவித்தது. இவ்வாறு ஒவ்வொரு நாட்டின் பெயர் மாற்றத்திற்குப் பின்னாலும் ஒரு தேசிய அடையாளமும், வரலாற்றுத் தேவையும் நிறைந்துள்ளதை உணர முடிகிறது.