உத்தரப்பிரதேசம் மீரட் நகரின் ஹஸ்தினாபூர் பகுதியைச் சேர்ந்த அதுல் பன்வார் மற்றும் தாமினி ஆகிய இருவரும் காதலித்து கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அண்மையில் இவர்கள் புதிய வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்து, பிழைப்பிற்காக ஒரு தனியார் பள்ளியையும் தொடங்கி நடத்தி வந்தனர்.
இந்நிலையில், ஒரு நாள் காலை அதுல் தனது படுக்கையறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலில் பாம்புக் கடிப் புள்ளிகள் இருந்தன. கோடை வெப்பம் காரணமாகத் தானும் தன் மகனும் வெளியில் தூங்கியதாகவும், காலையில் அதுலுக்கு டீ கொடுக்கச் சென்றபோது அவர் அசைவற்று இருந்ததாகவும், படுக்கையில் ஒரு விஷப் பாம்பு இருந்ததாகவும் தாமினி அக்கம் பக்கத்தினரிடம் கூறி அழுதுள்ளார்.
ஆரம்பத்தில் இது ஒரு சாதாரண பாம்புக் கடியால் நடந்த விபத்து மரணம் என்றே அனைவரும் கருதினர். ஆனால், அதுலின் தந்தை தன் மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, தாமினியின் பலத்த எதிர்ப்பையும் மீறி பிரேதப் பரிசோதனை செய்யக் கோரினார். காவல்துறையினர் விசாரணையில் இறங்கி, அதுல் மற்றும் தாமினியின் தொலைபேசி அழைப்பு விவரங்களை ஆய்வு செய்தபோது ஒரு அதிர்ச்சிகரமான உண்மை வெளிவந்தது.
தாமினிக்கும், அவர்களது பள்ளியில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த துஷார் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. விசாரணையில் உடைந்து போன தாமினி, தனது கள்ளக்காதலன் துஷாருடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்யத் தீட்டிய சதித்திட்டத்தை ஒப்புக்கொண்டார்.
கொலை நடந்த அன்று இரவு, தாமினி தனது கணவர் அதுல் குடிக்கும் பாலில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளார். அவர் மயக்கமடைந்ததும், துஷார் இரண்டு பாம்பு பிடிப்பவர்களுடன் விஷப்பாம்பு ஒன்றை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
அந்தப் பாம்பை அதுலின் படுக்கையில் விட்டு அவரைக் கடிக்க வைத்துள்ளனர். அதுலின் பெயரில் இருந்த 20 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கும், தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த அவரை நீக்குவதற்கும் இந்தச் சதி நடந்துள்ளது. இதற்கு உதவிய பாம்பு பிடிப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் தருவதாக துஷார் வாக்குறுதி அளித்திருந்தார்.
மேலும், 20 நாட்களுக்கு முன்பே அதுல் மீது காரை ஏற்றி கொலை செய்ய துஷார் முயன்றதும், ஹெல்மெட் அணிந்திருந்ததால் அதுல் உயிர் பிழைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. தற்போது தாமினி, அவரது கள்ளக்காதலன் மற்றும் இரு பாம்பு பிடிப்பவர்கள் என 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
