திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான 2 பேரையும் ஏழு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க திருவண்ணாமலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கவியரசன் உத்தரவிட்டுள்ளார்..
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி அதிகாலை தொடர்ந்து 4 ஏடிஎம்களில் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு, 73 லட்சம் ரூபாய் மர்ம கும்பலால் எடுத்துச்செல்லப்பட்டது. இந்த மர்ம நபர்களை தேடுவதற்காக ஐஜி கண்ணன் தலைமையில் 9 தனி படைகள் அமைக்கப்பட்டு ஆந்திரா, கர்நாடகா, அரியானா ஒரிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தீவிர தேர்தல் வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்ட நிலையில், கடந்த 18ஆம் தேதி அன்று ஹரியானா மாநிலத்தில் இந்த கொள்ளை கும்பலின் முக்கிய தலைவனான ஆரிப் மற்றும் கூட்டாளி ஆசாத் இருவரையும் திருவண்ணாமலை காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர்..
அதனை தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட அவர்கள் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து போலீசார் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இந்நிலையில் இன்று மத்திய சிறைச்சாலையில் இருந்து வந்த குற்றவாளிகள் இருவருக்கும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி கவியரசன் அவர்கள், 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளார். தொடர்ந்து தற்போது 2 முக்கிய குற்றவாளிகளும் நகர காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்..
இன்று முதல் 7 நாட்கள் தொடர்ச்சியாக அவர்களிடம் எந்தெந்த இடத்திற்கு சென்றார்கள், எவ்வாறு அந்த கொள்ளையை நிகழ்த்தினார்கள்.. இந்த கொள்ளையில் யார் யார் ஈடுபட்டுள்ளனர்.. பணம் குறிப்பாக எங்கே உள்ளது என விசாரிக்க உள்ளனர். ஏனென்றால் இதுவரை 3 லட்சத்தை மட்டுமே காவல்துறையினர் பறிமுதல் செய்ததாக கூறியுள்ளனர். இன்னும் மீதமுள்ள 70 லட்சம் எங்கு உள்ளது என முக்கிய குற்றவாளி ஆரிப்பிடம் விசாரித்தால் உண்மை தகவல் வெளிவரும் என்பதற்காக 7 நாட்கள் காவலில் எடுத்துள்ளனர்.. இன்று முதல் இவர்களிடம் பல்வேறு இடங்களில் விசாரணை நடைபெறும் என தெரிய வருகிறது..
இதனிடையே நேற்று அடைக்கலம் கொடுத்ததற்காக ஒருவரும் பணம் பரிமாற்றம் செய்வதற்காக ஒருவரும் என இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் கோலாரில் பதுங்கியிருந்த குர்திஸ் பாஷா மற்றும் அஷ்ரப் ஆகியோரை கைது செய்தது தனிப்படை போலீஸ்..அரியானா மாநிலத்தில் மேலும் 3 குற்றவாளிகள் பதுங்கி உள்ளதாகவும், விரைவில் அவர்களை கைது செய்வோம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.