களக்காடு முண்டந்துறையில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு  பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 1976 ஆம் ஆண்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், மேகமலை புலிகள் காப்பகம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் என நான்கு புலிகள் காப்பகங்கள் பின்னர் அறிக்கை செய்யப்பட்டது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் 150 உள்ளூர் தாவரங்கள் உட்பட 2000-க்கும் மேற்பட்ட தாவரங்களின் தாயகமாகும்.

இந்த புலிகள் காப்பகம் நதிகள் சரணாலயம் என அழைக்கப்படுகிறது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் திருநெல்வேலி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வந்தபோது களக்காடு முண்டந்துறை பகுதியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.  இதனை தொடர்ந்து சுற்றுச்சூழல் பூங்காவுடன் கூடிய உயிர் பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.