சென்னையில் உள்ள அண்ணா சாலை அருகே ஒயிட்ஸ் ரோடு பகுதியில் மூன்று மாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் இன்று காலை 10.5 மணிக்கு திடீரென லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். இதனால் கட்டிடத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் உடனடியாக வெளியே வந்து விட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் நில அதிர்வு ஏற்பட்டதற்கு காரணம் சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகள் தான் என்று கூறப்பட்ட நிலையில், அதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதாவது நில அதிர்வு ஏற்பட்டதாக சொல்லப்படும் இடத்தில் மெட்ரோ ரயில் பணிகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் ஏற்கனவே அங்கு மெட்ரோ பணிகள் நிறைவடைந்து தற்போது மெட்ரோ ரயில் சேவைகள் நடைமுறையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் துருக்கி சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இந்தியாவிலும் சில மாநிலங்களில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது சென்னையிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக வந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.