கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் கீழ்அனுப்பம்பட்டு சாலக்கரை பகுதியை சேர்ந்த தையல் தொழிலாளி மணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயிலில் தலைகீழாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த போலீசார் அவரை சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க செய்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, பல்லாயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வரும் பாசிமுத்தான் ஓடையில் சிதம்பரம் நகராட்சி நிர்வாகம் கழிவு நீரை திறந்து விடுகிறது. இதனால் துர்நாற்றம் வேசி விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாசிமுத்தான் ஓடையில் கழிவு நீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.