கடலூர் மாவட்டத்தில் உள்ள லெக்கூர் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக கூட்டு குடிநீர் திட்டத்திற்காக குழாய் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் சரிவர ஏற்றப்படவில்லை. கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிநீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.

இதனால் கோபமடைந்த பெண்கள் குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக காலி குடங்களுடன் வந்தனர். இது பற்றி அறிந்து போலீசார் முற்றுகையிட முயன்ற பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் 2 நாட்களுக்குள் குழாய்கள் அமைக்கும் பணி முடிந்து குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதன் பிறகு பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.