கோடைக்காலத்தில் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் பழங்களில் தர்பூசணிக்கும் முக்கிய இடம் உண்டு. அதிக நீர்ச்சத்து கொண்ட இந்தப் பழம் உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதுடன், தாகத்தைத் தணிக்கவும் உதவுகிறது. இதனால் பலரும் தர்பூசணியை முன்கூட்டியே குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்ச்சியாக சாப்பிடுகின்றனர்.
முழுமையாக இருக்கும், வெட்டப்படாத தர்பூசணியை அறை வெப்பநிலையில் சிறிது காலம் வைத்திருக்கலாம். ஆனால் பழத்தை வெட்டிய பிறகு நிலைமை மாறுகிறது. வெட்டப்பட்ட பகுதி காற்று மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள நுண்ணுயிரிகளுடன் தொடர்பு கொள்ளும் என்பதால், அதை நீண்ட நேரம் வெளியில் வைப்பது பாதுகாப்பானது அல்ல.
வெட்டிய தர்பூசணியைச் சுத்தமான, மூடியுள்ள உணவுப் பெட்டியில் வைத்து குளிர்சாதனப் பெட்டியில் சேமிப்பது நல்லது. குறிப்பாக வெட்டிய பழத்தை அறை வெப்பநிலையில் நீண்ட நேரம் வைத்திருந்தால், நுண்ணுயிரிகள் பெருகுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். எனவே வெட்டிய உடனேயே மீதமுள்ள பகுதியை மூடி குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது பாதுகாப்பான நடைமுறையாகும்.
அதேநேரத்தில், குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கிறோம் என்பதற்காக பழத்தை நீண்ட நாட்கள் சேமித்து வைக்கக் கூடாது. தர்பூசணியில் தோற்றம், வாசனை அல்லது சுவையில் மாற்றம் தெரிந்தால் அதை சாப்பிடாமல் இருப்பது நல்லது. எனவே குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது பிரச்னையல்ல; வெட்டிய பழத்தை சரியான முறையில் சேமிப்பதே முக்கியம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
