புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மங்கதேவன் பட்டியில் கூலி வேலை பார்க்கும் திருநாவுக்கரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதுடைய ஆனந்த் என்ற மகன் இருந்துள்ளான். நேற்று வீட்டிற்கு அருகே சரக்கு வேனில் திருநாவுக்கரசு விறகுகளை ஏற்றிக் கொண்டிருந்தார். அதே சமயம் அப்பகுதியில் வசிக்கும் சிறுவர்களுடன் ஆனந்த் வேனை சுற்றி விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் விறகுகளை ஏற்றி கொண்டு வேன் ஓட்டுநர் வாகனத்தை பின்பக்கமாக இயக்கியுள்ளார்.

அப்போது அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஆனந்த் பின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சிறுவனை மீட்டு கீரனூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்து டாக்டர் ஆனந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் மணிகண்டன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.